×

சட்டமன்ற தேர்தலுக்கு சற்றும் சளைத்தது அல்ல பஞ். தேர்தலிலும் அள்ளி வீசப்படும் வாக்குறுதிகள் வெற்றிலை மீது சத்தியம் செய்பவர்களுக்கு மட்டும் துட்டு

புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் வீடு வீடாக ஓட்டு கேட்டு செல்லும் வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். உங்களுக்கே வாக்களிப்பேன் என வெற்றிலை மீது சத்தியம் செய்து தருபவர்களுக்கு மட்டும் பணம் கொடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக அன்னவாசல், விராலிமலை, கறம்பக்குடி, குன்றண்டார்கோவில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல் இரண்டாம் கட்டமாக அரிமளம், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, திருமயம், மணமேல்குடி, திருவரங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு வரும் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.13 ஊராட்சி ஒன்றியங்களில் 497 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் பல இடங்களில் சித்தப்பா, பெரியப்பாக்கள், அவர்களின் மகன்கள், அத்தை, மாமன்கள் மற்றும் அவர்களின் மகன்கள் என உறவு முறையினர் நேரடியாக எதிர்த்து போட்டியிடுகின்றனர். இதனால் இவர்களின் உறவினர்கள் நேரடியாக யாரை ஆதாரிப்பது என்று குழம்பியுள்ளனர். சிலர் வெளிப்படையாக ஒருவரை ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். ஒரு சிலர் இருவரில் ஒருவரை போட்டியிட செய்ய சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீர்க்கப்படாத பிரச்னைகளை தீர்ப்பதாக கூறி, ஒருசிலர் ஓட்டு சேகரிக்கின்றனர்.‘படித்த இளைஞர்களுக்கு தேர்வு பயிற்சி மையம், வேலை வாய்ப்பு பயிற்சி மையம் ஆகியவை தனது சொந்த செல்வில் அமைப்பேன் என உறுதி அளித்து, ஓட்டு சேகரிக்கின்றனர். சிலர் ரோடு போடுவேன், மின்விளக்கு வசதி செய்வேன் என்றும், இன்னும் சிலர் காவிரி தண்ணீரை கொண்டு வருவேன் என்றும் வாக்குறுதிகளை அள்ளி விடுகிறார்கள்.பணம் மற்றும் அன்பளிப்பை வாங்கியும், சிலர் மாற்றி ஓட்டு போடுவர் என்பதால், கிராமங்களில் உள்ளவர்களிடம், வெற்றிலை மீது சத்தியம் வாங்கி, சில வேட்பாளர்கள், ஓட்டு கேட்டு வருகின்றனர்.இரவில், ஊர் முக்கிய பிரமுகர்களை வைத்து கூட்டம் நடத்தி, அதில் வெற்றிலை மீது சத்தியத்தை, வேட்பாளர்கள் வாங்குகின்றனர். இவ்வாறு சத்தியம் செய்து கொடுத்தவர்களுக்கு மட்டும், பணம் அல்லது அன்பளிப்பு வழங்க திட்டமிட்டு, அவர்களது பெயர்களை குறித்துச செல்கின்றனர். தேர்தலுக்கு முதல்நாள் அன்பளிப்பு அல்லது ரொக்கம் வந்துவிடும் என கூறி செல்கிறார்கள்.

Tags : Panj ,assembly elections , assembly, elections.,election,pawn
× RELATED காதலியின் கணவனை கொன்ற அதிமுக பஞ்.தலைவர்